ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களை சுட்டுத் தள்ள ராணுவத்தை அழைக்கப் போவதாக தெலுங்கானா முதல்வர் எச்சரிக்கை

ஹைதராபாத் : ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், எந்தவித கட்டுப்பாட்டையும் மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களை சுட்டுத் தள்ள ராணுவத்தை அழைக்கப் போவதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் 10 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600ஐ நெருங்குகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். அன்றைய நாள், நாடு முழுவதும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் என்ற உத்தரவை பிரதமர் மோடி நேற்று பிறப்பித்தார். வைரஸ் பரவுவதை தடுக்க, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். இந்த முடக்கம் ஏப்ரல் 14ம் தேதி வரை நீடிக்கும். அதே சமயம் அத்தியாவசிய கடைகள், சேவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தீவிரம் புரியாமல் பலர் வழக்கம் போல் சாலைகளில் நடமாடுவதுடன், வாகனங்களில் ஊர்சுற்றுகின்றனர். இதையடுத்து காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ள சந்திரசேகர ராவ், அவசியமானால் ராணுவத்தை அழைப்பதாக எச்சரித்துள்ளார்.

Related Stories: