பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் 90% அலுவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மக்களவையில் 90 சதவீதமும், மாநிலங்களவையில் 74 சதவீதமும் அலுவல் முடிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 3ம் தேதி பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இம்மாதம் 2ம் தேதி தொடங்கி நடந்த அவை கூட்டம், வைரஸ் பரவல் காரணமாக, கடந்த திங்கட்கிழமை இரு வாரங்களுக்கு முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது.   இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில்  ஒன்பது அமர்வுகள்  இருந்தன. இரண்டாவது கட்டத்தில் இரண்டிலும் 14 அமர்வுகள் இருந்தது.

கொரோனா காரணமாக உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் அவைகள் இரு வாரங்களுக்கு முன்பாக முடித்து வைக்கப்பட்டது. இந்த தொடரில் 19 மசோதாக்கள் (மக்களவையில் 18ம், மாநிலங்களவையில் 1ம் அறிமுகம் செய்யப்பட்டது). மக்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 12 ஆகும். இதில் முக்கியமானது நிதி மசோதா ஆகும். இது கடந்த திங்கட்கிழமை அவை தள்ளி வைக்கப்படுவதற்கு முன்பாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 90 சதவீத அலுவல்களும், மாநிலங்களவையில் 74 சதவீத அலுவல்களும் முடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: