தங்கியிருந்த ஓட்டல் ஏப்.20 வரை மூடப்பட்டது நெல்லை கொரோனா நோயாளி துபாயில் இருந்து திரும்பியவர்

நெல்லை: நெல்லையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர், நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர்(43). இவர் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமான துபாயில் இருந்து கடந்த 17ம் தேதி விமானம் மூலம் மதுரை  வந்து அங்கிருந்து நெல்லைக்கு நண்பர் ஒருவரின் காரில் வந்ததாக தெரியவந்துள்ளது. தச்சநல்லூர் வரை காரில் வந்த அவர் அங்கிருந்து பின்னர் பஸ் மூலம் வண்ணார்பேட்டை வந்துள்ளார். அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து 2 நாட்கள் தங்கியுள்ளார். பின்னர் மற்றொரு தளத்தில் உள்ள அறையில் இரண்டு நாள் தங்கினாராம். இதற்கிடையே அவரது சொந்த ஊரான சமூகரெங்கபுரத்திற்கு ஒரு நாள் சென்று வந்ததாக கூறப்படுகிறது.   

அவருக்கு அப்போது காய்ச்சல், சளி அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள மருந்துக் கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று. அதன்பின் ஓட்டலை காலி செய்து 21ம் தேதி இரவு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரே வந்து சேர்ந்துள்ளார். கொரோனா தனி வார்டில் அனுமதித்து, ரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு 22ம் தேதி இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் சிறப்பு தனிமை அறையில் உரிய கவச உடையுடன் கூடுதல் சிகிச்சை பெற்று வருகிறார்.  23ம் தேதி அவரது சொந்த ஊரான சமூகரெங்கபுரத்தில் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவர் வண்ணார்பேட்டையில் தங்கியிருந்த ஓட்டல் மாநகராட்சி அதிகாரிகளால் மூடப்பட்டது.  அவர் தங்கிய அறையில் பதிவான சிசிடிவி பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது அறைக்கு சர்வீஸ் செய்த 8 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த ஓட்டல் ஏப்.20ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: