7 மாதங்களுக்கு பிறகு ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதி பறிக்கப்பட்டதால் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி இருப்பதை அடுத்து சில வாரங்களுக்கு முன்னர் பரூக் அப்துல்லா மீதான பொதுப் பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் உமர் அப்துல்லா மீதான பொதுப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து சுமார் 7 மாதங்களுக்கு பிறகு உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு தகுதியை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்ததுடன் அம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் மெகபூபா முஃப்தி மட்டும் இன்னும் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

Related Stories: