சீரமைப்பு பணி என்ற பெயரில் அடையாறு இணைப்பு கால்வாயில் மண் கொள்ளை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: மலைப்பட்டு அடையாறு ஆறு இணைப்பு கால்வாய் சீரமைப்பு என்ற பெயரில் மண் கொள்ளை நடைபெறுவதாகவும் அதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குன்றத்தூர் ஒன்றியம் மலைப்பட்டு ஊராட்சி எல்லையில் அடையாறு ஆற்றினை இணைக்கும் வரவுக்கால்வாய் உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையில் மணிமங்கலம், சேத்துப்பட்டு, மலைப்பட்டு, கொளத்தூர், பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகள் நிரம்பி வெளியேறிய மழைநீர் அடையாறு ஆற்று படுகை வழியாக சென்று கடலில் கலந்து வந்தது.

இந்த ஆறு வரவுக்கால்வாய் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகி காணப்பட்டது. இதனால் ஆற்று கரை ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி, கரையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இந்த வரவுக்கால்வாயில் மண் எடுத்து கரையை பலப்படுத்தவும், ஆக்கிரமிப்பை அகற்றவும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. தற்போது வரவுக்கால்வாயில் அளவுக்கு அதிகமாக ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மண் எடுத்து வருவதாகவும், முறையாக மண் அள்ளாமல் கால்வாயை நாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, மலைப்பட்டு, சேத்துப்பட்டு ஆகிய ஊராட்சிகளின் எல்லையினை ஒட்டி அடையாறு ஆறு இணைப்பு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் அக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் இந்த பணிகள் நடைபெற வேண்டும். தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், தனியார் ஒருவருக்கு மண் எடுத்து விற்பனை செய்ய ஒப்பந்தம் வழங்கி உள்ளது.

இதனை பயன்படுத்தி, கரையை பலப்படுத்தாமல் மாறாக தனியாருக்கு மண் விற்பனை செய்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், பிள்ளைபாக்கம், படப்பை ஆகிய பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலை கட்டுமான பணிக்கு மண் தேவைப்படுகிறது. மேலும் லாரி ஒன்றுக்கு இரண்டு யூனிட் மண் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும், ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், குவாரி எடுத்தவர்கள் 10 ராட்சத பொக்லைன் மூலம் 4 யூனிட் முதல் 8 யூனிட் வரையில் மண் விற்பனை செய்கின்றனர்.

4 யூனிட் லாரிக்கு ரூ.2 ஆயிரம், 8 யூனிட் லாரிக்கு ரூ.4 ஆயிரம் வசூல் செய்கின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 500 லாரிகளில் மண் எடுத்து செல்கின்றனர். கடந்த 25 நாட்களில் பல ஆயிரம் லோடு மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. மண் குவாரி எடுத்தவர்கள் லாபநோக்கில் வரவுக்கால்வாயை பாழாக்கி உள்ளனர். மண் தரம் அதிகமாக உள்ள  ஒருசில பகுதியில் 30 அடி ஆழத்திற்கு மண் அள்ளி உள்ளனர்.

மாவட்ட கனிமவள அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளின் ஆதரவோடு இந்த மண் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து கால்வாய் பணியினை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* போலி பில் போட்டு பணம் சுருட்டல்

குவாரி எடுத்தவர்களுக்கு அரசு பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் போலியான பில் தயாரித்து அதன் மூலம் பல லட்சங்களை சுருட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories:

>