அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 3 கம்பெனிகளில் பயங்கர தீவிபத்து: கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் மக்கள் அவதி

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 3 கம்பெனிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுப் பகுதி மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகினர். அம்பத்தூர் தொழிற்பேட்டை 3வது தெருவில் ஒரே வளாகத்தில் கெமிக்கல், பெயின்ட், சரக்கு ஏற்றுமதி மற்றும் குழந்தைகளுக்கான நாப்கின் தயாரிக்கும் கம்பெனி உள்பட 10க்கும் மேற்பட்ட கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வளாகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளும் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் மூடப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இங்குள்ள கெமிக்கல் கம்பெனியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பின்னர், காற்றில் தீப்பரவி அருகே இருந்த சரக்கு ஏற்றுமதி மற்றும் நாப்கின் தயாரிக்கும் நிறுவனங்களிலும் பரவியது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், அம்பத்தூர், ஆவடி, ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம், மணலி, எழும்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 18க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. மேலும், 15க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டன. வடக்கு மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட அதிகாரிகள் சுப்பிரமணி, ராஜேஷ்கண்ணன், முகமது சையது ஷா, தென்னரசு தலைமையில் 150க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் போராடி நள்ளிரவு ஒரு மணியளவில் முழுமையாக தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், கெமிக்கல் கம்பெனிக்கு அருகில் இருந்த பெயின்ட் உள்ளிட்ட 7 கம்பெனிகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய 3 கம்பெனிகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இவ்விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கு நாசவேலை காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இவ்விபத்தினால் அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது, அங்குள்ள மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பெரிதும் அவதிப்பட்டனர்.

* ஐடி நிறுவனத்தில் தீ

அண்ணாநகர்: அண்ணாநகரில் உள்ள ஐடி கம்பெனியில் தீவிபத்து ஏற்பட்டதால் பொருட்கள் எரிந்து நாசமாகின. சென்னை அண்ணாநகர், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு பிரபல நகைக்கடை வளாகத்தின் 2வது மாடியில் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவன வளாகத்தில் இருந்து நேற்று காலை 7.30 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியதது.

சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து 2வது மாடி முழுவதும் பரவியது. தகவலறிந்து, அண்ணாநகர், ஜெ.ஜெ நகர், கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய இடங்களிலிருந்து 6 தீயணைப்பு வாகனங்களில், வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.

ஆனால், அதற்குள் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஏசி மெஷினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. ெதாடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: