பெற்ற தாய்க்கு தெரியாமல் பெண் குழந்தை விற்பனை: பழநியில் தந்தை உட்பட 3 பேர் கைது

பழநி: 3 மாத குழந்தையை தாய்க்கு தெரியாமல் விற்ற தந்தை உட்பட 3 பேரை பழநி போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஏஜென்டை தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை தாலுகா சின்னக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (31). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமிக்கு நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் வாழ்க்கை நடத்துவது சிரமமாக இருப்பதாக செல்வம் தனது நண்பரான முடக்குபட்டியில் ஓட்டல் நடத்தி வரும் ரவி என்பவரிடம் புலம்பியுள்ளார்.

குழந்தையை விற்பனை செய்துவிடலாம் என ரவி யோசனை கூறியுள்ளார். இதற்கு செல்வமும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம், தந்திக்குப்பத்தை சேர்ந்த போர்வெல் வாகனம் வைத்திருக்கும் ஜான் என்பவரிடம், குழந்தை விற்பனைக்கு உள்ளதாக ரவி தெரிவித்தார். இதையடுத்து ஜான், கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டணபள்ளியைச் சேர்ந்த யுவராஜ் மனைவி விஜயலட்சுமியிடம் (39), குழந்தையை ரூ.3.20 லட்சத்திற்கு விலை பேசினார். இவர்களது திட்டப்படி கடந்த டிச. 11ம் தேதி செல்வம், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பழநி அழைத்து வந்தார்.

தனலட்சுமி கழிவறைக்கு சென்று திரும்பிய சமயத்தில் 3 மாத பெண் குழந்தையை ஜான் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் செல்வம் கொடுத்துள்ளார். பின்னர் குழந்தை காணாமல் போனதாக மனைவியிடம் நாடகமாடினார். தனலட்சுமி பழநி டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசாரின் விசாரணையில், குழந்தையை விற்பனை செய்ததை செல்வம் ஒப்புக் கொண்டார். தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்று நேற்று குழந்தையை மீட்டு வந்தனர். செல்வம், அவரது நண்பர் ரவி, குழந்தையை வாங்கிய விஜயலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். ஏஜென்டாக செயல்பட்ட ஜான், தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால்தான் இதேபோல், வேறு குழந்தைகள் ஏதும் விற்பனை செய்யப்பட்டதா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>