ஸ்பெயின் சென்று திரும்பிய கோவை பெண்ணுக்கு கொரோனா

கோவை:  தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டிவிட்டரில், ஸ்பெயின் சென்று வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார். இதன்மூலம் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் சென்று வந்தவர் கோவையை சேர்ந்த 32 வயது பெண் என தெரியவந்துள்ளது. இவர் கடந்த வாரம் விமானம் மூலம் பெங்களூர் வந்தார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தார். பின்னர், வீட்டிற்கு சென்றவருக்கு காய்ச்சல் ஏற்படவே, கடந்த 20ம் தேதி கோவை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரின் ரத்த மாதிரிகளை எடுத்து சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பினர். ஆய்வு முடிவு நேற்று வெளியானது.

இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த பெண்ணுடன் இருந்தவர்கள், அவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறுகையில், “கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு கோவை இ.எஸ்.ஐ.  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன்  இருக்கிறார்”  என்றார். கோவையில் 7 பேருக்கு சிகிச்சை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இங்கிலாந்து சென்று வந்த திருப்பூரை சேர்ந்த 48 வயது ஆண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து 7 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Related Stories: