வெங்கத்தூர் ஊராட்சி கன்னியம்மன் நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சியில் வெங்கத்தூர், மணவாள நகர், கன்னியம்மன் நகர், எம்.ஜி.ஆர் நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் கன்னியம்மன் நகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்ததை அடுத்து எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து வெங்கத்தூர் ஊராட்சியில் தினமும் சேகரமாகும், 2 டன் குப்பையை அதிகத்தூர் ஊராட்சியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சில மாதங்களாக கொட்டி வந்தனர். இந்நிலையில், அதிகத்தூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னியம்மன் நகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் குப்பை கொட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு கன்னியம்மன் நகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் குப்பை கொட்டுவதும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வெங்கத்தூர் ஊராட்சியில் கடந்த வாரமாக குப்பை அகற்றப்படவில்லை. நகர் முழுதும் குடியிருப்பு பகுதிகளில் குப்பை தேங்கி கிடந்தது. இந்த குப்பையில் மாடுகள், பன்றிகள் கிளறி இரை தேடுவதால் குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து குப்பைகளை அகற்றி கன்னியம்மன் நகரில் கொட்ட போலீஸ் பாதுகாப்பு கோரி ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி, கவுன்சிலர் தினேஷ்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குப்பைகள் அகற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கன்னியம்மன் நகரில் கொட்டப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர்.  மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: