மலேரியா சிகிச்சைக்கான மருந்தை கொரோனா தடுப்புக்கும் பயன்படுத்தலாம்: செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி!

வாஷிங்டன்: கொரோனாவுக்கு உரிய மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளிலும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மலேரியா சிகிச்சைக்கான மருந்தை கொரோனா தடுப்புக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஜப்பான் நாட்டு தயாரிப்பான favipiravir என்ற காய்ச்சலுக்கான மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை குணப்படுத்த உரிய மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கும் ஆய்வாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் மலேரியா சிகிச்சைக்கான மருந்தை கொரோனா வைரஸ் தடுப்புக்கும் பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் அனுமதியளித்திருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து அதற்கான நடவடிக்கையில் அந்நாட்டு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பானின் பியூஜி பிலிம் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின்  favipiravir என்ற காய்ச்சலுக்கான மருந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றியிருப்பதாக சீனா அறிவித்துள்ளது. வூகானில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மருந்தை இந்தியாவிலும் தயாரிக்க முடியும் என ஜப்பானில் பணியாற்றும் ஆய்வாளர் மருத்துவர் கணேஷ் பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மருத்துவர்கள் மற்ற வைரஸ்களை கட்டுப்படுத்தும் மாத்திரைகளையே பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், favipiravir மருந்து ஆய்வாளர்களுக்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இருப்பினும் மருந்துகளை எதிர்பார்த்து காத்திருப்பதை விட வருமுன் காப்பதே கொரோனாவை ஒழிக்க சிறந்த வழி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: