மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா தள்ளிவைப்பு: இணை ஆணையர் தகவல்

சென்னை: கொரோனா எதிரொலி காரணமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவை தள்ளி வைப்பதாக கோயில் இணை ஆணையர் காவேரி தெரிவித்தார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில்  ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்தாண்டு பங்குனி பெருவிழா மார்ச் 29ம் தேதி பங்குனி பெருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. விழாவில் முக்கிய  நிகழ்வான தேர் திருவிழா வரும் ஏப்ரல் 4ம் தேதியும், அறுபத்து மூவர்  திருவிழா ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்று அதில் கூறப்பட்டு இருப்பது. தொடர்ந்து 10  நாட்கள் இவ்விழாவை நடத்த திட்டமிட்டிருந்தது.  இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அடுத்த 15 நாட்களுக்கு கோயில்களில் விழாக்களை தவிர்க்க வேண்டும். மேலும், கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுறுத்தியிருந்தார்.தற்போதைய சூழ்நிலையில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடினால் சிக்கல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு பங்குனி பெருவிழாவை  தள்ளி வைத்து இருப்பதாக இணை ஆணையர் காவேரி தெரிவித்தார். மேலும், பங்குனி பெருவிழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Stories: