கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை வார சந்தை, பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகளை மூட அரசு உத்தரவு

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பெரிய ஜவுளி, நகைக்கடைகள், பெரிய கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. மத்திய அரசின் தகவல்களின்படி தற்போது வரை 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இன்றைய தினம் அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்த எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளன. தேசிய பேரிடராக கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என்று பொது மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

மக்களும் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார். மேலும், ஈரானில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை இன்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குணமாகி வீட்டுக்குச் சென்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நேற்று, பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த 21 வயது இளைஞருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும்  பெரிய ஜவுளி, நகைக்கடைகள், பெரிய கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. வாரச்சந்தைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் சுத்தத்தை கடைபிடிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற முயற்சி மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: