தேனியிலிருந்து திருச்செந்தூர் வந்த அரசு பஸ்சில் ரூ.1 கோடி ஐம்பொன் சிலை கடத்தல்

தூத்துக்குடி: தேனியில் இருந்து திருச்செந்தூர் வந்த அரசு பஸ்சில் ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்தி வந்த இருவரை தூத்துக்குடியில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடிக்கு சுவாமி சிலைகள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். நேற்று மதியம் தேனியில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் வந்த போது அதில் இருந்த வாலிபர் ஒருவர் லேப்டாப் பேக்குடன் இறங்கினார்.

அவரது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து போலீசார் அவரிடம் இருந்த பேக்கை வாங்கி சோதனையிட்டனர். அப்போது அதில் சுமார் முக்கால் அடி உயரத்தில் 3 கிலோ 100 கிராம் எடையும், ரூ.1 கோடி மதிப்பிலுமான தெய்வானை  ஐம்பொன் சிலை இருந்தது. விசாரணையில் சிலையை கடத்தி வந்தது தேனி மாவட்டம்  பெரியகுளத்தைச் சேர்ந்த சசிக்குமார் மகன் ஷாம்  (23) என்பது தெரியவந்தது. அந்தச் சிலையை வாங்கிச் செல்ல அங்கு காத்திருந்த ஏரலைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன்  லிங்ககுமார் (22) என்பவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த சிலை மற்றும் இரு செல்போன்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் மேல் விசாரணைக்காக உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் தேனியை சேர்ந்த பிரபல சிலைக்கடத்தல் புள்ளி ஒருவர் இந்தச் சிலையை கொடுத்து அனுப்பியதும், லிங்ககுமாரின் கூட்டாளியிடம் இருந்து  அதற்காக ரூ.1 கோடி பெற்று வரக் கூறியிருந்ததும் அம்பலமானது. மேலும் தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள ஒரு விஐபிக்கு பூஜை அறையில் வைப்பதற்காகவும், போலீசார்  கண்ணில் மண்ணை தூவும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் லேப்டாப் பையில்  வைத்து அரசு பஸ்சில் சர்வ சாதாரணமாக ஐம்பொன் சிலை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக  தனிப்படை போலீசார் சிலைக்கடத்தல் கும்பலை சேர்ந்த ஸ்ரீதர், கண்ணன் உள்ளிட்ட  சிலரை தேடி வருகின்றனர். இவர்களை பிடித்தால் சிலை எங்கிருந்து கடத்தப்பட்டது என்பது குறித்து கூடுதல் தகவல்கள் தெரியவரும். சிலை கடத்தல் கும்பலை  சேர்ந்த இருவரை பிடித்து, ஒரு கோடி மதிப்பிலான சிலையை மீட்டுள்ள தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: