கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு எதிரி: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வேதனை

ஜெனீவா: கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு எதிரி என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால்  8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ், கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு எதிரியாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் விளங்குகிறது. சந்தேகப்படும் ஒவ்வொரு நபரையும் பரிசோதிக்க வேண்டும். விளையாட்டு நிகழ்ச்சிகள், கச்சேரிகள் உள்பட மக்கள் கூடுவதை தவிர்க்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்புத் தொடங்கி 60 நாட்களுக்குள் அதற்கான தடுப்பூசி சோதனை செய்யப்பட்டது நம்பமுடியாத மிகப் பெரும் சாதனை, என்று தெரிவித்துள்ளார். இதற்காக பாடுபட்ட ஆராய்ச்சியாளர்களைத் தாங்கள் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கான எதிர் போட்டியில் உலகம் இறுதியில் வெற்றி பெறும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: