உள்ளாட்சி தேர்தல் நிறுத்தத்துக்கு எதிரான வழக்கு: ஆந்திரா தேர்தல் ஆணைய முடிவை வரவேற்ற உச்ச நீதிமன்றம்: நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவு

திருமலை: உள்ளாட்சி தேர்தல் நிறுத்தியதை எதிர்த்து அரசு தொடர்ந்த வழக்கில் ஆந்திர மாநில தேர்தல் ஆணைய முடிவை உச்ச நீதிமன்றம் வரவேற்றுள்ளது. மேலும் தேர்தல் நிபந்தனைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக்கூடிய நிலையில்  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்ல வேண்டாமென  மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு மருத்துவப் பேரிடராக அறிவித்துள்ள நிலையில்  ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலை 6 வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக மாநில தேர்தல் ஆணையாளர் ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

இதைக் கண்டித்து ஆந்திர மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாப்டே, காவாய், சூரியகாந்த்  ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இதில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் மாநில தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவை ஏற்பதாகவும் அதே நேரத்தில் தேர்தலை நிறுத்தும்போது மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தாமல் மத்திய சுகாதார  செயலாளரிடம் மட்டும் ஆலோசனை நடத்தி தேர்தலை நிறுத்தி வைத்ததுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்பதாகவும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் நிபந்தனைகள் தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அதனை ரத்து செய்வதாகவும், மாநில அரசு ஏற்கனவே தொடங்கிய திட்டங்களை வழக்கம்போல் தொடரலாம்  என்றும் புதிதாக எந்த ஒரு திட்டம் செயல்படுத்த இருந்தால் அதனை தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகளை பெற்று அதன் பிறகு முடிவெடுக்க  வேண்டும்.இதேபோல் மீண்டும் தேர்தல் எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து கொள்ளலாம் என கூறி இந்த வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: