கொரோனா பீதி: தஞ்சை பெரியகோயில் மூடல்

தஞ்சை: கொரோனா வைரஸ் எதிரொலியால் தஞ்சை பெரியகோயில் நேற்று மூடப்பட்டதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டது. கல்லணை, தஞ்சாவூர்  தொல்காப்பியர் சதுக்கம், மணிமண்டபம், தஞ்சை அரண்மனை, சரஸ்வதி மகால் நூலகம், தொல்லியல்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் மணிகோபுரம், மராட்டா தர்பார் ஹால் ஆகியவை மூடப்பட்டன. இந்நிலையில் தஞ்சை பெரியகோயிலில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 24 மணி நேரமும் திறந்திருக்கும் பிரதான நுழைவாயிலான கேரளந்தகன் நுழைவாயில் கேட் நேற்று காலை மூடப்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் நினைவு சின்னம் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுகிறது என பேனர் கட்டப்பட்டிருந்தது. பெரியகோயில் தினமும் காலை 6 மணிக்கு  திறக்கப்பட்டு பகல் 12 மணி அளவில் நடை சாத்தப்படும். பின்னர் மாலை திறக்கப்பட்டு இரவு நடை அடைக்கப்படும். நேற்று காலை சாமிதரிசனம் செய்ய  ஏராளமான பக்தர்கள், வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்தனர். முன்னறிவிப்பின்றி கோயில் மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த இந்து  சமய அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் மாதவன், தொல்லியல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் 45 நிமிடம்  தாமதமாக பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது. ஆனால் பூஜைகள், அர்ச்சனைகள், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கவில்லை.

சில மணிநேரத்துக்குபின், பெரிய கோயிலை மூட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து கோயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா  பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல் கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் உள்பட அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. அண்டை மாநிலங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா  காட்சிமுனை உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் வரும் 31ம் தேதி வரை  மூடப்பட்டுள்ளன.

இதுதவிர மேட்டுபாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் புகழ்பெற்ற மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அண்டை  மாநிலங்களான கர்நாடகா, கேரளா மாநிலத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள வெளிமாநில, வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் அறைகளை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா  பயணிகள் வருகை குறைந்து ஊட்டி நகரத்தில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.

Related Stories: