ஹைவேவிஸ் மலைப்பகுதியில் விஷ மருந்து தின்ற குட்டியானை சாவு

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள், பறவைகள் உள்ளன. இப்பகுதியில் தேயிலை, ஏலம், மிளகு, காப்பி தோட்டங்கள் அதிகமாக உள்ளன. தோட்டங்களில் வனவிலங்குகள் வருவதை தடுக்க திம்மெட் எனப்படும் விஷ மருந்தை பாதைகளில் தூவுகின்றனர். இதை தெரியாமல் தின்னும் வனவிலங்குகள் பரிதாபமாக உயிரிழக்கின்றன.

 இப்பகுதியில் ஏற்கனவே இரண்டு குட்டி யானைகள் விஷ மருந்தை தின்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஹைவேவிஸ் அணைப்பகுதியில் மேய்ந்த குட்டியானை ஒன்று விஷமருந்தை தின்று உயிரிழந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற கால்நடை மருத்துவர்கள், குட்டி யானையை உடற்கூறு பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

ஏற்கனவே, சிறுத்தைப்புலி ஒன்று ஓராண்டுக்கு முன்பு விஷ மருந்தை தின்று இறந்தது. இரண்டு பெரிய யானைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு மின்வயரில் சிக்கி உயிரிழந்தன. வனத்துறையின் ரோந்து மற்றும் கண்காணிப்பு குறைவாக இருப்பதே வனவிலங்குகளின் இறப்புக்கு காரணம் என கூறுகின்றனர். எனவே, ஹைவேவிஸ் பகுதியில் தோட்டப்பகுதியில் விஷ மருந்து தூவுபவர்களை தடுக்க வனத்துறையும் போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: