தமிழகம் முழுவதும் தயார் நிலைக்கான மருத்துவ வசதியை விரிவுப்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா நோய் தொடர்பாக அரசு அறிவித்துள்ள ‘’வருமுன் காப்போம்’’ நடவடிக்கைகளை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். மக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக மிக அவசியமான ஒன்றாக அமைந்திருக்கிறது. அரசின் சார்பில் அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். நோய் அறிகுறி பற்றி கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கும் கிங் நிறுவன ஆய்வகம் பரிசோதனை செய்ய வேண்டும். தனியார் ஆய்வகங்களும் இந்த ஆய்வை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். ஏழை-எளிய மக்களுக்கு அது பயன்படக்கூடிய வகையில் அதற்குரிய கட்டணத்தை, அரசே நிர்ணயிக்க வேண்டும்.

விமான நிலையங்களுக்கு அருகிலேயே, நோய்க்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி, ‘’தங்க வைக்கக்கூடிய மையங்களை’’ அனைத்து மருத்துவ வசதிகளுடனும் உருவாக்கிட வேண்டும். அதில் நாம் தாமதமாக இருக்கிறோமோ என்ற ஒரு அச்சம் இருந்து கொண்டிருக்கிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத புறநகர்ப் பகுதியிலும், ஒவ்வொரு மாவட்ட தலைநகர் மருத்துவமனைக்கு அருகிலும் இடத்தை தேர்வு செய்து, மருத்துவ வசதிகள் அடங்கிய தனிமைப்படுத்தும் மையங்களைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தித் தரவேண்டும்.    தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டார். அவரும் குணமடைந்து வீடு திரும்புகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.   இதுவரை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த எத்தனை பேருக்கு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ரயில்கள் மூலம் வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகள்; அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகள்; பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருப்பவர்கள் எத்தனை பேர்; அதில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களை வெளிப்படையாக அரசு தெரிவிக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பதில் அரசுக்கு நிச்சயம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ‘’தயார் நிலை’’க்கான மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.கே.ஆர்.ராமசாமி(சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்): பீகார், மத்திய பிரதேசத்தில் சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்னைக்கு இடையில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டுமா? சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்தில் 5 இடங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு பரிசோதனை ெசய்யப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்படும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. தமிழக அரசு சுகாதாரத்துறைக்கு ₹30 கோடி ஒதுக்கியுள்ளது. 25 லட்சம் முககவசம் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 62 பேருக்கு ஸ்கிரினிங் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 2,221 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.  16 எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு, சுகாதாரத்துறையினர், கால்நடைத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரயில்கள், பஸ்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை. தமிழக அரசு மக்களை காக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இருந்தாலும் பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த நேரத்தில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டுமா. சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. வீட்டில் இருந்தே வேலை: தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறைச்சாலைகள், பொதுமக்கள் அடிக்கடி செல்லக்கூடிய காவல்நிலையங்கள் ஆகிய இடங்களிலும், போக்குவரத்து காவலர்களுக்கும் வருமுன் காக்கக்கூடிய தற்காப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் வீட்டில் இருந்தே பணிபுரியக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கிட அரசு எல்லா வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Related Stories: