கலக்கத்தில் முதல்வர் கமல்நாத்: ம.பி. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? இல்லையா?...பாஜக மனுவை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவாளர்களாக இருந்த 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து சட்டப்பேரவையில், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்த, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்திருந்தார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

ஆளுநர் லால்ஜி டாண்டன் தனது வழக்கமான உரையை வாசித்தார். 2 நிமிடங்களுக்குள் தனது உரையை முடித்துக் கொண்டார். அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு விடுத்த வேண்டுகோளில், மாநிலத்தில் நிலவும் தற்போதைய நிலவரத்தை கருத்தில்  கொண்டு அனைவரும் அரசியல்சாசன விதிமுறைகளை பின்பற்றி, ஜனநாயக பாண்பை காப்பாற்ற வேண்டும் என்றார். ஆளுநர் தனது உரையை முடித்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என பா.ஜ எம்.எல்.ஏக்கள் கோரிக்கை  விடுத்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல மாநிலங்களில் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’’ எனவே சட்டப்பேரவையை வரும் 26ம் தேதிவரை ஒத்திவைப்பதாக சபாநயகர் பிரஜாபதி உத்தரவிட்டார்.

சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாததால், இன்று வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வர் கமல்நாத்துக்கு, ஆளுநர் லால்ஜி டாண்டன் மீண்டும் உத்தரவிட்டார். ஆனால் சட்டப்பேரவை வரும் 26ம் தேதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஆளுநர் நேற்று பிறப்பித்த உத்தரவும் வீணானது. இதற்கிடையே, மத்தியப் பிரதேச பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 9 பா.ஜ எம்.எல்.ஏ.க்கள் இணைந்து உச்ச  நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். முதல்வர் கமல்நாத் அரசு சிறுபான்மை அரசாகிவிட்டது.

அது ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை. சிறுபான்மை அரசை, பெரும்பான்மையாக்க, முதல்வர் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்கிறார். குதிரைப்பேரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைத்தால்,  குதிரைப்பேரம் அதிகரிக்கும். அதனால் ஆளுநர் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த ம.பி சபாநாயகர், முதல்வர் மற்றும் சட்டப்பேரவை முதன்மை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக  விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. உச்சநீதிமன்ற மனுவை விசாரித்தப்பின் மத்தியப் பிரேதச சட்டப்பேரவையையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெறுமா? இல்லையா? என்று தெரியவரும்.

Related Stories: