சிறைகளில் கொரோனா தொற்று அபாயம் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கை என்ன? மார்ச் 20ல் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கைதிகள் நெருக்கம் அதிகமுள்ள சிறைகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயம் உள்ளதால் அங்கு எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கை என்ன என்பது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச செயலாளர்கள் வரும் 20ம் தேதி விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். 120 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. இந்நிலையில், இளம் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சீர்திருத்த பள்ளிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது. நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதி எல்.என்.ராவ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கைதிகள் நெருக்கம் அதிகமாக உள்ள சிறைகளில் `கோவிட் 19’ கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து யூனியன் பிரதேசங்கள், அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சிறைத்துறை இயக்குனர்  ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் வரும் 20ம் தேதி தங்கள் பதிலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

மேலும் வரும் 23ம் தேதி மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் பிரதிநிதிகளை நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றனர்.

Related Stories: