நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் அறுவடை இயந்திர வாடகை: புலம்பி தவிக்கும் விவசாயிகள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆண்டு தோறும் அறுவடை இயந்திரங்களின் வாடகை மட்டும் அதிகரித்து வருவதால், வரவைவிட செலவு அதிகரிப்பதாக விவசாயிகள் புலம்பி தவித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தொடர் பருவமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது. மாவட்டத்தில் உள்ள குளங்களும் நிரம்பி வழிந்தன. இதன்காரணமாக கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் விவசாயிகள் நெல், வாழை, காய்கறி வகைகளை பயிர் செய்தனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிளகான நெல்லை, பாளை, முன்னீர்பள்ளம், தருவை, கோபாலசமுத்திரம் மேலச்செவல், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடை, அம்பாசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்தது.

இந்நிலையில் விவசாய பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாத நிலையிலும் நெற் பயிர்களை நடவு செய்யவும், களை பறிக்கவும், வரப்புகளை தரிக்கவும் விவசாயிகள் இயந்திரங்கள் உதவியை நாடினர். இதற்காக இயந்திரங்களை மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்து விவசாய பணிகளை கவனித்து வந்தனர். இதில் நெல்லை மேலச்செவல் பஞ்சாயத்து பகுதியான தேசமாணிக்கம் பகுதியில் கன்னடியன் கால்வாய் நடுமடை பாசனம் மூலம் சுமார் 1200 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு விவசாயிகள் அம்பை 16, டிகேஎம் புதிய ரக நெல்லையும் பயிர் செய்துள்ளனர். இப்பயிர் கடந்த நவம்பர் மாதம் நடவு செய்து 115 முதல் 120 நாட்கள் காலஅளவு கொண்ட பயிரினை நடவு செய்தனர். தற்போது பயிர் நல்ல விளைச்சல் ஏற்பட்டு அறுவடை பணி நடந்தது. கடந்த காலங்களில் விவசாய பணியாளர்கள் வயல்களில் இறங்கி பண்ணை அரிவாள் மூலம் கதிர்களை அறுத்து அடுக்கி தலையில் தூக்கி வரப்புகளில் நடந்து வருவதே தனி அழகாகும்.

இதன்பின்னர் களத்திற்கு கொண்டு வந்து மாடுகளை பூட்டி புனையல் அடித்து நெல் மணிகள் வேறு வைக்கோல் வேறாக பிரிக்கப்பட்டு வந்தது. காலநிலை மாற்றத்தாலும், நாகரீக வளர்ச்சியாலும் பல்வேறு பணிகளுக்கும், நூறு நாள் திட்ட பணிகளுக்கும், மகளிர் சுயஉதவி குழு மூலம்  நடைபெறும் பணிகளுக்கும் பொதுமக்கள் சென்று விட்டதால் அறுவடை பணிக்கு தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இதன் காரணமாக அறுவடை பணிக்கு இயந்திரங்களை களமிறக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் அறுவடை இயந்திரங்கள் மணிக்கு ரூ.2800 கட்டணமாக வசூலிக்கின்றனர். இதனால் ஒரு ஏக்கர் அறுவடை செய்ய ரூ.4200 கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது. அறுவடை இயந்திரம் மூலம் நெல் பயிர்களை அறுவடை செய்யும் போது இதன் மூலம் கிடைக்கும் வைக்கோல்களை கால்நடைகள் திண்பதில்லை. இதனால் வைக்கோல் கட்டுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நெல்லுக்கும் போதிய விலை இல்லாத நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக பலர் விவசாய பணிகளை விட்டு நிலத்தை தரிசாக மாற்றி விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயி சேதுராமலிங்கம் கூறுகையில், நமது முன்னோர்கள் செய்த விவசாய பணியை விட்டுவிட கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம். தற்போதைய காலத்தில் விவசாய பணிகளுக்கு தேவையான வேலையாட்கள் இல்லை. நெற்பயிர் நடவு முதல் அறுவடை பணிகள் வரை இயந்திரத்தை நம்பித்தான் விவசாயம் குற்றுயிரும் குலைஉயிருமாய் உள்ளது. டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்தால் ஆண்டுதோறும் அறுவடை இயந்திரத்தின் வாடகை அதிகரித்து வருகிறது. தற்போது மணிக்கு ரூ.2800 வாடகை வசூலிக்கப்படுகிறது. ரூ.700 விற்பனை செய்யப்பட்டு வந்த உர மூடை ரூ. 1400க்கு இரட்டிப்பாக விலையேற்றம் கண்டுள்ளது. அரசு அறுவடை இயந்திரங்கள் போதிய அளவு இல்லை. நெல்லுக்கு போதிய விலை இல்லை. விதைத்து அறுவடை செய்பவனுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை.

மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நேரிடையாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். முகவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: