நிர்பயா வழக்கு: மரண தண்டனைக்கான நாள் நெருங்கும் நிலையில் கருணைக் கொலை செய்ய குற்றவாளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை

புதுடெல்லி: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை வரும் 20ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை கருணைக் கொலை செய்யும்படி அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நிர்பயா பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திகார் சிறை எண் 3ல் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளையும் சிறை நிர்வாகம் செய்து முடித்து தயார் நிலையில் வைத்துள்ளது. இதற்கிடையில், அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி தூக்குதண்டனையில் இருந்து 3 முறை தப்பித்த குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங்(32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26) மற்றும் அக்ஷய் குமார் சிங்(31) ஆகியோர் வாய்ப்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததையடுத்து மரண தண்டனைக்கான நாட்களை எண்ணிக்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில், குற்றவாளிகளை கருணை கொலை செய்ய கோரி, அவர்களது குடும்பத்தினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர். குற்றவாளி முகேஷின் குடும்பத்தினரிடம் இருந்து 2 கடிதங்கள், பவன் மற்றும் வினய் ஷர்மாவின் குடும்பத்தினரிடம் இருந்து தலா 4 கடிதங்கள் மற்றும் அக்ஷயின் குடும்பத்தினரிடம் இருந்து 3 கடிதங்கள் என மொத்தம் 13 கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தங்கள் குடும்பத்தில் பெண்கள், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கருணை கொலை செய்வதற்கான அனுமதியை வழங்க அவர்கள் கோரியுள்ளனர். எதிர்காலத்தில் நிர்பயா போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் மன்னிக்க முடியாத பாவங்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: