கொரோனா பரவி வருவதால் ஏப்.20 வரை சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெறாது: டென்னிஸ் கழக நிர்வாகிகள் அறிவிப்பு

லண்டன்: சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஏப்.20 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 3வது வாரம், 4வது வாரம் மற்றும் ஏப்ரலில் முதல் இரண்டு வாரங்களில் நடைபெறுவதாக இருந்த மகளிர் ஐடிஎப் உலக டென்னிஸ் டூர், ஜூனியர் ஐடிஎப் உலக டென்னிஸ் டூர், வீல்சேர் டென்னிஸ், ஐடிஎப் பீச் டென்னிஸ் உலக டூர் மற்றும் ஐடிஎப் சீனியர்ஸ் டூர் ஆகிய போட்டிகள் அனைத்தையும் தள்ளி வைத்து, சர்வதேச டென்னிஸ் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சர்வதேச டென்னிஸ் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் (கோவிட்-19) பரவி வருகிறது என்ற செய்திகளை கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சர்வதேச அளவில் போட்டி அமைப்பாளர்கள், போட்டிகளுக்கான மருத்துவக் குழுவினர், பயணங்களை ஏற்பாடு செய்யும் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என அனைவரிடமும் கலந்து ஆலோசித்த பின்னர், சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகள் அனைத்தையும் ஏப்.20ம் தேதி வரை தள்ளி வைப்பது என்று முடிவெடுத்துள்ளோம்.

வாரந்தோறும் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும். ஆனால் ஏப்.20 வரை போட்டிகளை நடத்துவதில்லை என்ற முடிவில் மாற்றம் இருக்காது. நிலைமை சீரான பின்னர் எங்களுடைய பங்குதாரர்கள், ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தேசிய மற்றும் மண்டல அளவிலான அலுவலர்களிடம் கலந்து பேசி, தள்ளி வைக்கப்பட்டுள்ள போட்டிகளை எந்த தேதிகளில் நடத்துவது என்பதை முடிவு செய்வோம். விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கு ஆதரவு தரும் அணிகள், ஸ்பான்சர்கள், போட்டிகளை நடத்தும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். இதனை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இத்தாலியில் நடைபெற இருந்த மிலான் ஓபன்,  இண்டியன்வெல்சில் நடைபெற இருந்த பிஎன்பி பாரிபாஸ் ஓபன் மற்றும் புடாபெஸ்டில் நடைபெற இருந்த ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: