ஆம்பூர் வனப்பகுதியில் பஞ்சமுக நந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ள இடம் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த மலைக்கோட்டை பாழடையும் அவலம்: சுற்றுலாத்தலமாக்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வனசரக காப்பு காடுகளில் சில பகுதிகள் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட கவுண்டன்யா காப்புக்காடுகளை ஒட்டி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதிகளாக உள்ளஆம்பூருக்கு மேற்கே உள்ள வனச்சரக காப்பு காடுகளில் முக்கியமான 3 மலைக்கோட்டைகள் உள்ளன. இங்கு பழங்கால கோட்டை அமைந்துள்ளது. மலைமேல் உள்ள கோட்டைக்கு மலையின் கீழிருந்து செல்ல கருங்கற்களால் ஆன நடைபாதை உள்ளது.மலையின் உச்சியில் எதிரிகள் நுழையாதவாறு கட்டப்பட்ட மதில்சுவர் அரணாக அமைந்துள்ளது. கோட்டையை சுற்றி மலை முழுவதும் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு இந்த மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.மதில் சுவரின் உள்ளே கருங்கற்களால் உருவாக்கப்பட்ட மதில் சுவர் உள்ளது. மலையை சுற்றிலும் இந்த 2 மதில் சுவர்களும் தடுப்பு அரணாக விளங்குகின்றன.

இந்த பகுதியின் உள்ளே இருக்கும் பஞ்சமுக நந்தீஸ்வரர் கோயிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் பிரதோஷம் , சிவராத்திரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இந்த குளத்தின் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். கோடைகாலத்திலும் இந்தக் குளத்தின் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.  குளத்தை சுற்றிலும் உள்ள அடர்ந்த மரங்களே இந்த குளத்தின் தண்ணீர் ஆவியாகாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.இந்தக் குளத்தைத் தாண்டி மேலே சென்றால் முழுக்க முழுக்க பாறைகளை வெட்டி எடுத்து, கட்டிமுடிக்கப்பட்ட பஞ்சமுக நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். கோவிலின் உள்ளே பஞ்சமுக நந்தீஸ்வரர் மூலவராக இருந்து காட்சியளிக்கிறார். பஞ்சமுக நந்தீஸ்வரர் ஆலயத்தின் இடது பக்கம் வள்ளி தெய்வாணை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி காட்சியளிக்கிறார். பஞ்சமுக நந்தீஸ்வரர் ஆலயத்தின் வலது பக்கம் முழுமுதற் கடவுளான விநாயகர் காட்சி தருகிறார்.

கோயிலின் உட்பிரகாரத்தில் சுற்றி வரும் போது சிவபெருமான், விஷ்ணு, அம்மன் திருவுருவச் சிலைகளை தனித்தனி பிரகாரங்களில் அமைத்துள்ளார்கள். முழுக்க முழுக்க பாறைகளை வெட்டி எடுத்து பஞ்ச முக நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை மிகப்பெரிய அளவில் கட்டி முடிக்க மலையின் கீழே பாறைகள் வெட்டப்பட்ட தூண்கள் இன்றளவும் காட்சி பொருளாக அங்கே இருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.பாறை கோயிலின் பக்கத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் மூலவர் விக்கிரகத்தை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சமூக விரோதிகள் யாரோ எடுத்து சென்றுள்ளனர். மூலவர் இல்லாத கோயிலாக செங்கற்களால் கட்டப்பட்ட கோயில் உள்ளது. கோயிலுக்குள்ளே புதையல் இருப்பதாக எண்ணி சேதப்படுத்தியும் உள்ளார்கள்.

பஞ்சமுக நந்தீஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கேயும் ஒரு வற்றாத சுனை உள்ளது. மரங்களின் அடியில் உள்ளஇந்த மலைக் கோட்டையின் மதில் சுவரில் இருந்து மேற்கே பார்த்தால் மேற்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநில பகுதிகள் தெரிகிறது. இந்த, மாதகடப்பா மலைக்கோட்டையும், ஏரிகளும், கோயில்களும் கோட்டை கொத்தளங்களும் முழுக்க முழுக்க ஆம்பூர் வனச்சரக பகுதியில் அமைந்துள்ளது. இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த மலைக்கோட்டை பாழடையும் அவலநிலையாக உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல முறையான சாலை வசதி கிடையாது. மலைமேல் உள்ள கோட்டைக்கும், கோயிலுக்கும் செல்ல முறையாக சாலை வசதி அமைத்து, அடிப்படை வசதிகளை செய்து சுற்றுலாத்தலமாக்கினால், தமிழகம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநில மக்களின் ஒரு பெரிய சுற்றுலாத் தலமாக இந்த மலைக்கோட்டை மாறும். இதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். பழமைகளும் பாதுகாக்கப்படும். எனவே மலைக்கோட்டையை சீரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: