திவாலான யெஸ் வங்கியில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு 18ம்தேதியுடன் வாபஸ்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: வராக்கடன் சுமையால் திவால் நிலைக்கு சென்றுவிட்ட யெஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. வாடிக்கையாளர் டெபாசிட் மற்றும் முதலீடுகளை பாதுகாக்க சில கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. ரிசர்வ் வங்கியின் சீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, வாடிக்கையாளர் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மார்ச் 18ம் தேதி முதல் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் வங்கியான யெஸ் வங்கி, வராக்கடன் சுமையால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. இதனால், அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

வங்கியின் தற்போதைய நிர்வாகியான பிரசாந்த் குமாரை மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது. வங்கியை சீரமைக்கும் திட்டத்தையும் அறிவித்தது. இது கடந்த 5ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பணம் எடுப்பதற்கு ஏப்ரல் 3ம் தேதி வரையில் கட்டுப்பாடுகள் விதித்தது. வங்கி சீரமைப்பு திட்டத்தை மார்ச் 13ம் தேதி அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசு, கட்டுப்பாடுகளை மார்ச் 18ம் தேதியுடன் நீக்கி வங்கி தொடர்ந்து வழக்கம்போல் செயல்படும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

மீட்பு திட்டத்தில்..

* பாரத ஸ்டேட் வங்கி உள்பட 7 முதலீட்டாளர்கள் யெஸ் வங்கியில் மொத்தம் ரூ.11,750 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன.

* ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகியவை தலா ரூ.1,000 கோடி முதலீடு செய்து 6 சதவீத பங்குகளை வாங்க முன்வந்துள்ளன.

* ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி ஆகியவை தலா ரூ.500 கோடி முதலீடு செய்து 3 சதவீத பங்குகளை வாங்க உள்ளன.

Related Stories: