58 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு திருப்பதி கோயிலுக்கு இணையாக பழநி கோயில் தரம் உயர்த்தப்படும்: திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டி முதல்வர் பேச்சு

திண்டுக்கல்: பழநி கோயில், நகர் பகுதி 58 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு திருப்பதிக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என திண்டுக்கல் அரசு  மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லூரி, அடியனூத்து ஊராட்சியில் 327 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு  விழா நேற்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், அணைக்கட்டு,  தடுப்பணை என 340.86 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பணி முடிந்த 14.02 கோடி மதிப்பிலான 45  கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து 25,213 பயனாளிகளுக்கு 63.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:திண்டுக்கல்லில் துவங்கப்படவுள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் 2021- 22ம் கல்வியாண்டிலேயே 150 பேர் படிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் பழநி மலைக்கோயில் மற்றும் நகரை நவீனப்படுத்த 58 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்க உள்ளது.  இதன்மூலம் பழநி கோயில் திருப்பதிக்கு இணையாக தரம் உயர்த்தப்படுவதுடன், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ள கோயிலாக  அமையும்.

தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும்.  விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய  விலை கிடைக்கும் வகையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ₹215 கோடியில் மார்க்கெட்கள் உருவாக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு  உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழக மக்கள் நோயின் பரவல் குறித்து எச்சரிக்கை தன்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை  வகிக்க, தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல்  சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை  வகித்தனர்.

‘ரஜினி பற்றி கருத்து கூற இயலாது’

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை புறப்படுவதற்கு முன் மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: கொரோனா பரவுவதை  தடுப்பதற்கு சுகாதாரத்துறை மற்றும் உரிய பிற துறைகளின் அமைச்சர்களுடன் ஆலோசித்து தேவையான முன்னெச்சரிகை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமில்லை. ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. எனவே அவரைப் பற்றிய  கற்பனையான எந்த கருத்தையும் கூற இயலாது. கமலின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்து விட்டோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும்  கட்சி ஆரம்பிக்கலாம். மக்களை சந்தித்துக் கொள்ளலாம். சட்டசபை தேர்தலுக்கு பிறகு அமமுக இருக்குமா என்பதை பார்ப்போம். சிஏஏ தொடர்பாக  சட்டசபையில் சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்கும்விதமாக ஏற்கனவே பதில் கூறப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மிக்சரை சாப்பிடாமல் எல்லோரும் கைத்தட்டுங்க...

அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘முதல்வர், துணை முதல்வரை பொன்னர்- சங்கர் போன்றவர்கள்,  2 பேரும் சொக்கத்தங்கம்’’ என்று புகழ்ந்து தள்ளினார். கட்சி நிர்வாகிகளுக்கு மிக்சர் போன்றவை வழங்கப்பட்டிருந்ததால் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.  அப்போது  திண்டுக்கல் சீனிவாசன், ‘‘சாப்பிடுவதை நிறுத்தி விட்டு கைத்தட்டுங்கள்’’ என்று கூறியதால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.  இதன்பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் பேசினால் இறுக்கமாக இருக்கும் மனம் மகிழ்ச்சி  அடைந்து விடும்’’ என்றார்.

Related Stories: