இந்தியாவுக்கு வந்து கொரோனா வைரசை பரப்ப விருப்பமில்லை: சீனாவில் படிக்கும் கர்நாடக வாலிபர் உருக்கம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமகூரு அருகே உள்ள ஒசகெரே பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் பாஷா. இவரின் இளைய மகன் சாஹில் உசேன்,  கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவின் வான்லி மாகாணம், நாச்சிங் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் டாக்டருக்கு படித்து வருகிறார்.கொரோனா வைரசின் பயம் காரணமாக இந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு  திரும்பியுள்ளனர். சிலர் மட்டுமே அங்கே தங்கி இருக்கிறார்கள். சாஹில் உசேனும் வீடு திரும்ப மறுத்து, விடுதியில் தங்கியுள்ளார்.சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் தனது மகனை உடனடியாக இந்தியாவுக்கு திரும்பும்படி ரிஸ்வான் கூறினார். அதை ஏற்க மறுத்த உசேன்,  வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ‘நான் இப்போது நன்றாக இருக்கிறேன். சீனாவில் இருந்து கர்நாடகாவுக்கு நேரடி விமானங்கள் இல்லை. மூன்று விமானங்கள் மாற வேண்டும்.  ஒருவேளை நான் அங்கு வந்தால் பயணத்தின் போது, எனக்கு ஒரு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதை என் நாட்டிற்கு குறிப்பாக  கர்நாடகாவில் பரப்பினால், அது ஒரு பிரச்னையாக இருக்கும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் நான் இங்கே தங்கி இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். மேலும், முகக்கவசம் அணிந்து தனது விடுதி அறையிலிருந்து வெளியே செல்லும் உசைன், முழு பல்கலைக்கழக வளாகத்தையும் சுற்றி நடந்து  காண்பித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்தார். 14 நிமிட வீடியோவை பார்த்த பிறகு, பெற்றோர் தனது மகனின் முடிவை எண்ணி பெருமிதம் கொண்டனர். இந்த வீடியோ  சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: