நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடக்கம்: அதிகாரிகள் தகவல்

வேலூர்: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. மற்ற உள்ள நகரப்புற பகுதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி நகர்ப்புற தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியல் கடந்த 6ம் தேதி வெளியிட்டது. தற்போது நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது.இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

 அதில், நகர்ப்புற அமைப்பின் பெயர், வார்டு எண், பாகம் எண், நகர்ப்புற அமைப்பின் குறியீட்டு எண், வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர், வாக்குச்சாவடியின் வகை, சம்பந்தப்பட்ட வார்டில் அடங்கியுள்ள தெருக்களின் விவரம், தொடங்கும் வரிசை எண், முடியும் வரிசை எண், வாக்காளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற வேண்டும். இதை தொடர்ந்து வாக்குச்சாவடியின் பெயர் மற்றும் முகவரி, கட்டிடத்தின் முகப்பு தோற்றம், வாக்குச்சாவடியின் முகப்பு தோற்றம், தரை வரைபடம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.இறுதியாக சட்டமன்ற தொகுதிக்கான 2020ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் யாரும் இந்த பட்டியலில் விடுபடவில்லை என்று வாக்காளர் பதிவு அலுவலர் சான்று அளிக்க வேண்டும். தேர்தல் மற்றும் அலுவலக பயன்பாடு, பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு வாக்காளர் பட்டியலையும் 100 பிரதிகள் படியெடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 20ம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: