குமரி எஸ்.பி. அலுவலகத்தில் கலப்பு திருமணம் செய்த தம்பதியை தாக்க முயற்சி

நாகர்கோவில்:  திருநெல்வேலி ஆசிரியர் காலனி பகுதியில் வசித்து வருபவர் வினோதினி (28). வங்கி மேலாளர். இவர் நேற்று காலை, குமரி மாவட்ட எஸ்.பி.யிடம், ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நானும், குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்த ஏசுதாஸ் (38) என்பவரும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களின் காதல் விவகாரம், எனது பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் சாதி மற்றும் கவுரவம் கருதி எனது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கர்நாடக மாநிலத்தில் கடந்த 22.1.2020ல் நானும், ஏசுதாசும் பதிவு திருமணம் ெசய்து கொண்டு வாழ்ந்து வந்தோம்.

உறவினர்கள், பெற்றோர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களை சேர்த்து வைப்பதாக கூறினர். இதை நம்பி, மீண்டும் நாகர்கோவில் வந்த எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். எஸ்.பி.யை சந்தித்து விட்டு வினோதினியும், ஏசுதாசும் வெளியே வந்தனர். அப்போது வினோதினி உறவினர்கள் சிலர், தம்பதியை தாக்க பாய்ந்தனர். அவர்களிடம் இருந்து தம்பதியினரை போலீசார் மீட்டு எஸ்.பி. அலுவலகத்துக்குள் அனுப்பி வைத்தனர்.

Related Stories: