உன்னாவ் பெண்ணின் தந்தை மரண வழக்கு உ.பி. எம்எல்ஏ செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: தம்பிக்கும் 10 லட்சம் அபராதம்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உன்னாவ் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் இறந்த வழக்கில், பாஜ.வில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள உன்னாவ் கிராமத்தை சேர்ந்த மைனர் பெண்ணை ஒருவரை, அப்போதைய பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017ம் ஆண்டு பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மகளுக்காக நியாயம் கேட்டு போராடிய தந்தை மீது குல்தீப் செங்காரின் சகோதரர் அதுல் சிங் செங்கார் தனது ஆதரவாளர்களுடன் தாக்குதல் நடத்தினார். மேலும், அவர் மீது போலீசில் பொய் புகார் அளித்தார். இதன் பேரில் உன்னாவ் பெண்ணின் தந்தை மீது கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரலில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார். அங்கு அவர் மர்மமான அவர் முறையில் இறந்தார்.

இதைத் தொடர்ந்து, குல்தீப் செங்கார் உள்ளிட்டோர் மீது போலீசார் பாலியல் பலாத்காரம், பெண்ணின் தந்தை மர்ம மரண உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்குகள் சிபிஐ.க்கு மாற்றப்பட்டன. செங்கார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகும், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்களை கொலை செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடந்தன. கடந்தாண்டு ஜூலை மாதம், உன்னாவ் பெண் தனது உறவினர்கள் மற்றும் வக்கீல் சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் உன்னாவ் பெண்ணின் அத்தைகள் இருவர் பலியாயினர். படுகாயம் அடைந்த உன்னாவ் பெண் , டெல்லி கொண்டு வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்நிலையில், செங்கார் மீதான வழக்குகளை விசாரித்த சிபிஐ, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை உறுதி செய்தது. இதையடுத்து, குல்தீப் செங்கார் பாஜ.வில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீதான வழக்குகள் உ.பி.யில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த டிசம்பரில் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.  அதேபோல், உன்னாவ் பெண்ணின் தந்தை மர்ம மரண வழக்கிலும் குல்தீப் செங்காரை உள்ளிட்டோரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. மேலும், தண்டனை விவரத்தை நேற்று அறிவித்தது. அதில், குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவருடைய தம்பி அதுல் சிங் செங்காருக்கு, குல்தீப் செங்காரும் பாதிக்கப்பட்ட பெண்ணுகஅகு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போலீசாருக்கான தண்டனை விவரம் வெளியாகவில்லை.

பேனர் சண்டை

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடத்தி பொதுச் சொத்தை சேதம் ஏற்படுத்திவர்களிடம் நஷ்டஈடு கேட்டு, அவர்களின் போட்டோக்களுடன் கூடிய பேனர்களை உ.பி அரசு பொது இடங்களில் வைத்தது. இதன் மூலம், தனிநபர் உரிமை பாதிக்கப்படுவதாக கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த பேனர்களை அகற்றும்படி உபி அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உபி அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், இந்த பேனருக்கு போட்டியாக, அந்த பேனருக்கு அருகிலேயே பலாத்காரம் குற்றம் சுமத்தப்பட்ட பா.ஜ தலைவர்கள் சுவாமி சின்மயானந்த், குல்தீப் செங்கார் ஆகியோரின் படங்களுடன் கூடிய பேனர்களை சமாஜ்வாடி தலைவர்களில் ஒருவரான ஐ.பி.சிங் நேற்று முன்தினம் இரவு வைத்தார். அதில், ‘இவர்கள் உ.பி பெண்களை நாசம் செய்த குற்றவாளிகள். இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Stories: