கொரோனாவால் பள்ளிகள் விடுமுறை; மாணவனின் வீட்டிற்கு மதிய உணவு எடுத்துச் சென்ற அங்கன் வாடி ஆசிரியை

திருவனந்தபுரம்: உலகளாவிய தொற்று நோய் என ஐநா.வால் அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 76 ஆக இருந்த நிலையில் இன்று 81 ஆக அதிரித்துள்ளது. இதில் கேரள மாநிலத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் நூஹூ வெளியிட்டுள்ளார்.10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழகிய மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பின்னர் தனியாக தேர்வு எழுதி அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த அறிவிப்பு வரும்வரை பத்தனம்திட்டா முழுவதும் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ள நிலையிலும் அங்கன்வாடி ஆசிரியை ஒருவர் மாணவன் வீட்டிற்கே மதியம் உணவு எடுத்து சென்றுள்ளார். அவரை பார்த்த மாணவன் புன்சிரிப்பால் அவரை வரவேற்கும் புகைப்படத்தை மலையாள மனோரமா எடுத்துள்ளது. இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருந்துவரும் நிலையில் உங்களின் சேவை எங்களது இதயங்களை வென்றுவிட்டது என்று பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: