உடுமலை நகராட்சியில் வீணாகி வரும் பேட்டரி வாகனங்கள்

உடுமலை: உடுமலை நகராட்சியில் குப்பை சேகரிக்க வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களின் பழுதை நீக்காததால் அவை வீணாகி வருகின்றன. உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இவை 5 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு, துப்புரவு தொழிலாளர்கள் மூலம் குப்பை அள்ளப்படுகிறது. டிப்பர் லாரிகள் செல்ல முடியாத இடங்களில், சிறிய தெருக்களிலும் சென்று குப்பை சேகரிக்கும் வகையில், நகராட்சி சார்பில் தலா ரூ.1.80 லட்சம் மதிப்பில் 31 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன.

400 வீட்டுக்கு ஒரு பேட்டரி வாகனம் என்ற அடிப்படையில் குப்பை சேகரிக்கப்பட்டது. இந்த பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்வதற்காக சர்தார் வீதி பூங்கா அருகேயும், ராஜேந்திரா சாலை மாட்டுத்தொழுவம் அருகேயும் சார்ஜ் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பல பேட்டரி வாகனங்கள் பழுதாகி வருகின்றன. இவற்றை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.சந்தை வளாகத்தில் 5 வண்டி, மாட்டுதொழுவம் அருகே 3 வண்டி, சர்தார் வீதியில் ஒரு வண்டி என 9 பேட்டரி வாகனங்கள் பழுதாகி பயன்பாடின்றி கிடக்கின்றன. இதனால் மீண்டும் தள்ளுவண்டியில் குப்பை அள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘பேட்டரி வாகனங்களை 4 மணி நேரம் சார்ஜ் போட்டால் 25 கிமீ., தூரம் செல்லலாம். ஆனால் வயர் கட்டாகி உள்ளதால் சார்ஜ் ஏறுவதில்லை. சில வாகனங்கள் பஞ்சராகி உள்ளன. டியூப்லெஸ் டயர் என்பதால், இதை சரி செய்ய கம்பெனி ஆட்கள்தான் வரவேண்டும் என்று நிலை உள்ளது. பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதில்லை’’ என்றார். இது பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பொறியியல் பிரிவிடம் தெரிவித்துவிட்டோம். அவர்கள்தான் சரி செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: