விமானநிலையம், எழும்பூர் ரயில்நிலையம், கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னையின் முக்கிய இடங்களான விமானநிலையம், எழும்பூர் ரயில்நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை விமானநிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் போக்குவரத்து வழக்கம் போல காணப்பட்டது. இந்நிலையில் அந்த மூன்று இடங்களிலும் இன்னும் சிறிது நேரத்தில்வெடிகுண்டு வெடிக்கும் என்று ேநற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் பேசி, இணைப்பை துண்டித்தார். இது குறித்து விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது மேலும் கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் முருகன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஏஞ்சல் மோப்ப உதவியுடன் கோயம்பேடு பகுதியில் 2 மணிநேரம் சோதனை நடந்தது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.  

இதைப்போன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து  ஆர்.பி.எப் கமிஷனர் சாய்பிரசாத், ரயில்வே டி.எஸ்.பி எட்வர்டு, ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் மோகன், ரயில்வே இன்ஸ்ெபக்டர் பத்மகுமரி தலைமையில் தமிழக காவல்துறையை சேர்ந்த 6 வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் டைசன் உதவியுடன் எழும்பூர் ரயில்நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அதுவும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்போரூரை அடுத்துள்ள அச்சரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குப்பம்மாள் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருப்போரூர் போலீசார் நடத்திய விசாரணையில் அச்சரப்பாக்கத்தில் குப்பம்மாள் என்ற பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதைப்போன்று சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: