ஆந்திரா உள்ளாட்சி தேர்தல் ஆளுங்கட்சியினர் அராஜகம் சந்திரபாபு கண்டன தர்ணா

திருமலை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆளுங்கட்சியினரின் அராஜகத்தைக் கண்டித்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் வரும் 21ம் தேதி தொடங்கி 4 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தற்போது வேட்பு மனுத் தாக்கல் நடந்து வருகிறது. பிரதான கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். பல இடங்களில் மனு தாக்கலின்போது இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

குண்டூர் மாவட்டம், மாச்சர்லாவில் தெலுங்கு தேசம் கட்சியினர் நேற்று முன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றனர். அப்போது அங்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவர்களை தடுத்து நிறுத்தி வேட்புமனுவை பறித்து கிழித்து வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு தேசம் முன்னாள் எம்எல்ஏ போண்டா உமா, எம்எல்சி புத்தா வெங்கண்ணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு காரில் சென்றனர். இதையறிந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மாச்சர்லா- துர்கி சாலையில் அவர்களது காரை வழிமறித்து கடப்பாரையால் தாக்கி கார் கண்ணாடிகளை நொறுக்கினர். இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக  அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு இது தொடர்பாக விஜயவாடா டிஜிபியை சந்தித்து முறையிட நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சுமார் 2 கிமீ தூரம் பேரணியாக சென்றார். அவருடன் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடன் சென்றனர். அப்போது டிஜிபி அலுவலகம் அருகே வந்த சந்திரபாபு, திடீரென அப்பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார், சந்திரபாபுவிடம் பேச்சு நடத்தினார். இதனை ஏற்று, அவரிடம் மனு அளித்த சந்திரபாபு, ‘‘உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினரின் அராஜக போக்கை தடுக்க வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைக்க போலீசார் துணைபோகக் கூடாது’’ என்றார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றார்.

Related Stories: