மெரினாவில் கடை நடத்துவதற்கு 3ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மெரினா கடற்கரையில் கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை  மாநகராட்சி அறிவித்துள்ளது. மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் லூப்சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம், மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் விரைவில் சீரமைக்கப்பட உள்ளது. அங்குள்ள 1300 வியாபாரிகள் அடையாள அட்டை பெற்று இருக்கும் நிலையில், 900 பேருக்கு மட்டும் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 3ம் தேதி முதல் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 900 வண்டிகளில் 60 சதவீத வண்டிகள் மெரினா கடற்கரையில் தற்போதுள்ள விற்பனையாளர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படும். புதிகாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு 40 சதவீத கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விற்பனை கட்டணம், விற்பனை நேரம் மாத வாடகை தொகை, பராமரிப்பு கட்டணம், அபராத தொகை போன்ற விவரங்களைக் கொண்ட விண்ணப்பங்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை சமர்பிக்கலாம். விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு குலுக்கல் முறையில் விற்பனையாளர்கள் தேர்வு ெசய்யப்படுவார்கள். சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும், என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: