கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு: திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய ரூ.300 டிக்கெட்டை ரத்து செய்துகொள்ளலாம்...தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,169ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  80,796ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் வேகமாக குறைந்து வருகிறது.

இருப்பினும் ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ்  கோரத் தாண்டவம் ஆடி வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர்  வெளிநாட்டினர்கள் ஆவர். இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில  அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பக்தர்கள் அதிகளவில் இருப்பதால் இடைவெளியுடன் செல்வது இயலாதது. இவ்வாறு செல்லும்போது வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள், வெளிநாட்டினர் ஏழுமலையான் கோயிலுக்கு வரவேண்டுமென்றால், இந்தியாவிற்கு வந்து 28 நாட்களுக்கு பிறகுதான் கோயிலுக்கு வர வேண்டும் என்று தேவஸ்தானம்  அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று கொரோனா அச்சுறுத்தலால் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செய்திருந்த முன்பதிவை ரத்து செய்துகொள்ளலாம் என தேவஸ்தானம் கூறியுள்ளது. பக்தர்கள் மே மாதம் வரை முன்பதிவு செய்த ரூ.300 தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்துகொள்ளலாம் என்றும், தரிசனத்தை வேறு தேதியில் முன்பதிவு செய்துகொள்ளவும் ஆன்லைனில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதியில், கொரானா அச்சுறுத்தல் மற்றும் நோய் தொற்று பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காய்ச்சல், தலைவளி, சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பக்தர்கள் யாராக இருந்தாலும் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை விரைவில் தரிசனம் செய்ய பக்தர்கள் ரூ.300-க்கு டிக்கெட் எடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: