சிவகளை, ஆதிச்சநல்லூரில் மார்ச் 15ம் தேதி அகழாய்வு பணிகள் ஆரம்பம்: அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைக்கிறார்!

தூத்துக்குடி: சிவகளை, ஆதிச்சநல்லூரில் வருகின்ற மார்ச் 15ம் தேதி அகழாய்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது. அகழாய்வு பணிகளை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் தொல்லியல் களத்தில் வருகின்ற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அகழாய்வு பணியானது தொடங்கவுள்ளது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் தொல்லியல்துறை அதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். தொடர்ந்து, சிவகளை அகழாய்வு பணிக்காக ரூபாய் 32 லட்சமும், ஆதிச்சநல்லூருக்கு ரூபாய் 28 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிவகளையில் 4 குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆதிச்சநல்லூரில் பெரியளவில் குழி அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்ற இந்த அகழாய்வு பணியானது கிட்டத்தட்ட 8 மாதங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஆதிச்சநல்லூரில் 2004ம் ஆண்டு தொல்லியல்துறையினர் அகழாய்வு பணிகளை நடத்தினர். அந்த அகழாய்விற்கான அறிக்கையானது இன்னும் சமர்பிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆய்வானது விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் இரண்டாவது கட்டமாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஆரம்பமாகவுள்ளது. ஆனால் சிவகளையில் தற்போது தான் அகழாய்வு பணியானது நடக்கின்றது. கிட்டத்தட்ட நீர் பரப்பு பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவிலும், நிலப்பரப்பு பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவிலும் மிகப்பெரிய தொல்லியல் களமானது சிவகளையில் இருக்கிறது. அந்த தொல்லியல் களத்தில் முதன்முறையாக தற்போது அகழாய்வு பணிகள் துவங்கவிருக்கிறது. சிவகளையை பொறுத்தவரையில் மிக பழமையான கற்கள் உள்ளிட்ட பல தொன்மையான பொருட்கள் அங்கிருந்து ஏற்கனவே கிடைத்திருக்கின்றது. தொடர்ச்சியாக இந்த அகழாய்வு பணி நடைபெறும் போது கீழடியை விட மிக தொன்மையான நாகரீகம், தாமிரபரணி நாகரீகம் என்ற தகவல்கள் வெளிவரும் என்று தொல்லியல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே மிகப்பெரிய ஆர்வத்தோடு காத்திருந்த சிவகளை தொல்லியல் களத்தில் வரும் 15ம் தேதி அகழாய்வு தொடங்கவிருப்பது சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: