கொடியேற்றத்துடன் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா துவக்கம்

*மே 4ம் தேதி ஆழித்தேரோட்டம்

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான வருகிற மே மாதம் 4ம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். பங்குனி உத்திர திருவிழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த விழாவினையொட்டி கோயிலின் மூலவரான வன்மீகநாதர் சன்னதி எதிரே 2ம் பிரகாரத்தில் இருந்து வரும் 54 அடி உயர கொடிமரத்தில் நேற்று காலை 7 மணியளவில் சிவாச்சாரியார்கள் மூலம் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சந்திரசேகரசுவாமி காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் வருகிற மே மாதம் 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: