கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு: சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை: வரும் 29ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள், நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக சம்பந்தப்பட்ட அணி நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பரவுவதால், பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.அலெக்ஸ் பென்சிகர் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘உலக சுகாதார அமைப்பின் வலைத்தளத்தில் குறிப்பிட்டபடி, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எதுவும் இல்லை அல்லது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி ஒரு பெரிய தொற்றுநோயை உருவாக்கி வருகிறது. இத்தாலிய அரசாங்கத்தால் எந்த கால்பந்து போட்டியிலும், மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் கால்பந்து விளையாட்டுக்கள் விளையாடப்பட்டு வருகிறது. எனவே, இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ நிர்வாகம் அனுமதிக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதற்கு எவ்வித பதிலும் இல்லாததால், தற்போது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை (மார்ச் 12) உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Related Stories: