மத்திய அமைச்சராக வாய்ப்பு: குடும்ப பாரம்பரியத்தை உதறி ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்யா சிந்தியா

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் 15 ஆண்டுக்குப் பிறகு கடந்த 2018ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போது, சீனியாரிட்டியை காரணம் காட்டி  கமல்நாத் முதல்வரானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகனும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மருமகனுமான ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு முதல்வர்  பதவி கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இவர் குணா தொகுதி காங்கிரஸ் எம்பி.யாக உள்ளார்.

இதற்கிடையே, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை போல் மத்திய பிரதேசத்திலும் ஆட்சிக் கவிழ்ப்புக்காக பாஜ காய் நகர்த்துவதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ.க்கள்  மாயமாகி பின்னர் மீண்டும் திரும்பினர். இப்படிப்பட்ட சூழலில் அதிருப்தி தலைவரான சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 19 பேர் நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் திடீரென பெங்களூரு சென்று, அங்குள்ள ரிசார்ட்டில் தங்கினர்.  இவர்களில் 6 பேர் அமைச்சர்கள். இது தவிர, மேலும் 3 அதிருப்தி எம்எல்ஏ.க்கள் போபாலில் ரகசிய இடத்தில் தங்கியுள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று அதிரடி திருப்பம் ஏற்பட்டது. ஜோதிராதித்யா சிந்தியா திடீரென டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார். பூட்டிய அறையில் நடந்த இந்த சந்திப்பை தொடர்ந்து, அமித்ஷாவின்  காரில் ஏறி சிந்தியா புறப்பட்டு சென்றார். அடுத்த சிறிது நேரத்தில் அவர் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியானது. தனது விலகல் கடிதத்தை தனது உதவியாளர் மூலமாக சோனியா காந்தியிடம் அவர்கள் நேரடியாக கொடுத்துள்ளார்.

இந்த கடிதம் கிடைத்த சிறிது நேரத்தில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிந்தியாவை கட்சியில் இருந்து நீக்கி சோனியா உத்தரவிட்டார். அடுத்தடுத்த இந்த திருப்பங்களைத் தொடர்ந்து, பெங்களூரு ஓட்டலில் உள்ள அதிருப்தி  எம்எல்ஏ.க்கள் 22 பேரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக மபி ஆளுநர் லால் ஜி டாண்டனுக்கு இ-மெயில் அனுப்பினர். இதேபோல், இந்த அடுத்தடுத்த சம்பவங்களால் மபி அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ.க்களையும் வளைக்க பாஜ நடவடிக்கை எடுத்து  விட்டது. இதற்கிடையே, பாஜகவில் தன்னை இணைத்து கொண்டால் மத்திய அமைச்சர் பதவி அளிப்பதாக ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் ஜோதிராதித்யா சிந்தியா தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து  வரவேற்ற ஜெ.பி.நட்டா, பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

‘ஒரே கல்லுல 2 மாங்கா‘

ஆதரவாளர்கள் புடை சூழ பாஜ.வில் ஐக்கியமாகிய ஜோதிராதித்யா சிந்தியா, ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கப் போகிறார். விரைவில் நடக்க உள்ள மபி மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தி சிந்தியாவை எம்பி.யாக்குவதாக பாஜ உறுதி அளித்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையிலும் இவருக்கு வாய்ப்பளிப்பதாக பாஜ கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால்தான், குடும்ப பராம்பரியத்தையும் உதறி, காங்கிரசில் இருந்து விலகி பாஜ.வில் அவர் ஐக்கியமாகி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories: