வடசென்னையில் தொடர் கைவரிசை 3 கொள்ளையர்கள் சிக்கினர்: பைக், 5 செல்போன் பறிமுதல்

தண்டையார்பேட்டை: வடசென்னையில் உள்ள ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சாலையில் நடந்து செல்பவர்கள், பைக்கில் செல்பவர்களை மறித்து, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டது.  கடந்த 8ம் தேதி ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் சாலமன், சந்தோஷ், அசோக்குமார் ஆகியோர் பானிபூரி சாப்பிட்டுகொண்டு இருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் அரிவாளால் வெட்டி அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்து சென்றனர். இதேபோல் வண்ணாரப்பேட்டை, சிமின்ட்ரி சாலையில் வாக்கிங் சென்ற டேவிட் ராஜ் என்பவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள், அவரின் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகார்களின் பேரில், ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.

மேலும், சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த குசுமி (எ) பிரவீன்குமார் (22), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (எ) பட்டாணி ரமேஷ் (20), மணி (எ) டியோ மணி (24) ஆகியோர் மேற்கண்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 செல்போன், 3 கத்திகள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: