ரஞ்சி பைனல் சவுராஷ்டிரா 206/5

ராஜ்கோட்: பெங்கால் அணியுடனான ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்துள்ளது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. தேசாய், பரோட் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்தது. தேசாய் 38 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். சிறப்பாக விளையாடிய பரோட், விஷ்வராஜ் ஜடேஜா அரை சதம் அடித்தனர்.

இருவரும் தலா 54 ரன் எடுத்து ஆகாஷ்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஷெல்டன் ஜாக்சன் 14 ரன் எடுக்க, செதேஷ்வர் புஜாரா 5 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக ஓய்வு பெற்றார் (ரிடயர்டு ஹர்ட்). சகாரியா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்துள்ளது (80.5 ஓவர்).  வாசவதா 29 ரன்னுடன் களத்தில் உள்ளார். பெங்கால் பந்துவீச்சில் ஆகாஷ்தீப் 3, போரெல், ஷாபாஸ் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: