யெஸ் பேங்க் முறைகேடு ராணா கபூரின் 7 இடங்களில் ‘ரெய்டு’: சிபிஐ `லுக் அவுட்'நோட்டீஸ்

புதுடெல்லி: யெஸ் வங்கியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அந்த வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமாக மும்பையில் உள்ள 7 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. குற்றவாளிகள் தப்பி செல்லாமல் இருக்க அவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. யெஸ் வங்கி வராக்கடன் பிரச்னையில் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை கபூரை கைது செய்துள்ளது. இதையடுத்து அவரது மகள் ரோஷினி லண்டன் தப்பி செல்ல முயன்றபோது மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதுடன் அவருக்கு லுக் அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கபூரின் குடும்பத்துக்கு சொந்தமான திவான் ஹவுசிங் அண்ட் பைனான்ஸ் லிமிடெட் (டிஎச்எப்எல்)நிறுவனத்தின் ரூ.3,700 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களில் கடந்த 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் யெஸ் வங்கி முதலீடு செய்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது.

இதற்கு பிரதிபலனாக ராணா கபூரின் மகளான ரோஷினி கபூருக்கு சொந்தமான டொயிட் நிறுவனத்திற்கு ரூ.600 கோடியை டிஎச்எப்எல் வழங்கியதாக  அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில் சிபிஐயும் கபூரின் மனைவி பிந்து அவர்களது மகள்கள் ரோஷினி, ரேகா  மற்றும் ராதா மற்றும் டிஎச்எப்எல், ஆர்கேடபிள்யூ டெவலப்பர் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர்கள் கபில் வாதவன், தீரஜ் வாதவன் ஆகியோர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது. இதையடுத்து மும்பையில் கபூருக்கு சொந்தமான 7 இடங்களில் நேற்று சிபிஐயை சேர்ந்த 10 படைகள் அதிரடி சோதனை நடத்தியது.

ஒர்லியில் உள்ள சமுத்திர மகால், நரிமன் பாயின்டில் உள்ள ராகே மற்றும் ராதாவுக்கு சொந்தமான வீடுகள், பலேஸ் ஹில்ஸ் பகுதி மற்றும் டிஎச்எப்எல், டோல்ட், ஆர்கே டெவலப்பர்ஸ் என 7 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது தவிர குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க சிபிஐயும் நேற்று லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் மறுப்பு

யெஸ் பேங்க் முறைகேட்டுக்கு காங்கிரசே காரணம் என பாஜ குற்றம்சாட்டியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் ஓவியத்தை ராணா கபூர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம் ₹2 கோடி கொடுத்து பெற்றதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. பிரியங்கா காந்தியிடம் இருந்து ₹2 கோடிக்கு பெற்ற பெயிண்டிங்குக்கு கடந்த 2010 வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்ைல எனவும் காங்கிரஸ் மறுத்துள்ளது.

Related Stories: