நெல்லை, தூத்துக்குடி டாக்டர்களும் பங்கேற்பு மகளிர் தினத்தில் 50 பெண்கள் 33 கிமீ மெகா சைக்கிள் பயணம்: சைக்கிள் பயன்பாடு விழிப்புணர்வு பிரசாரம்

நெல்லை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து தூத்துக்குடி சாலையில் 25 பெண்கள் 33 கிலோ மீட்டர் தூரமும், தூத்துக்குடியில் இருந்து 25 பெண்கள் நெல்லை நோக்கி 15 கிலோ மீட்டர் தூரமும் ஒரே நேரத்தில் பயணித்தனர். இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து மகளிர் தினவிழா மற்றும் சைக்கிள் பயண விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

மகளிர் தினத்தை பயனுள்ளதாக கொண்டாடுவதற்காக நெல்லையை சேர்ந்த பை சைக்கிள் சங்கம், பை சைக்கிள் மேயர், நெல்லை மத்திய ரோட்டரி, தூத்துக்குடி பேர்ல் சிட்டி ரோட்டரி ஆகியவை இணைந்து சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.

இதன்படி நெல்லை விஎம் சத்திரம் பாலம் அருகே இருந்து நேற்று அதிகாலை 6 மணிக்கு நெல்லை பை சைக்கிள் அமைப்பின் மேயர் டாக்டர் அருள் விஜய்குமார், டாக்டர் நிர்மலா விஜய்குமார், மற்றும் 11 வயது சிறுமி உள்ளிட்ட 25 பெண்களும் சில ஆண்களும் சைக்கிளில் தூத்துக்குடி சாலையில் 33 கிலோ மீட்டர் தூரம் சென்றனர். சுமார் 2 மணி நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அதே நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட 25 பெண்கள் உள்ளிட்ட குழுவினர் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நெல்லை குழுவினர் நிறைவு செய்த பகுதிக்கு வந்தனர்.

இரு குழுவினரும் நெல்லை-தூத்துக்குடி பிரதான சாலையில் மகளிர் தின கொண்டாட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். 2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மனிதரும் தனது பயணத்தில் 50 சதவீதத்தை சைக்கிளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை கடைப்பிடித்து நோயற்ற வாழ்வு வாழ வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் காஞ்சனா சுரேஷ், வக்கீல் சொர்ணலதா, தொழில் அதிபர் மயில் பாலசுப்பிரமணியன், உலகுராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.

Related Stories: