பழநி வையாபுரியில் கழிவுநீரை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்: ரூ.51.85 கோடி ஒதுக்கீடு

பழநி: பழநி வையாபுரி குளத்திற்கு வரும் கழிவுநீர் வாய்க்கால்களை புனரமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூபாய் 51.85 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் பணிகள் துவங்க உள்ளதாக பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை  வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள்- வெளிநாடுகளில்  இருந்தும் சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். பழநி நகரின்  மையப்பகுதியில் வையாபுரிகுளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நகரின் நிலத்தடி  நீர்மட்ட உயர்விற்கும் இக்குளம் அடிப்படை ஆதாரமாக உள்ளது. இக்குளத்திற்கு வரதமாநதி அணையில் இருந்து வாய்க்கால் மூலம் நீர்ப்பாசனம்  கிடைக்கிது.

பக்தர்கள் நீராடும் வகையில் புனிதமாக கருதப்பட்டு வந்த வையாபுரி குளத்தின் பல மூலைகளிலும் தற்போது கழிவுநீர் கலக்கிறது. இதனால் இக்குளம்  கடும் துர்நாற்றம் வீசி மினிகூவமாக மாறியது. மேலும் குளத்தில் உள்ள நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே,  வையாபுரி குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐபி  செந்தில்குமார் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும், சட்டமன்றத்திலும் வலியுறுத்தி பேசினார். இதன்பயனாக தற்போது கழிவுநீர் கால்வாய் மற்றும்  சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூபாய் 51.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பழநி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது,  ‘ரூபாய் 51.85 கோடியில் வையாபுரி குளத்தின் முன்பக்க கரை உயர்த்தப்பட்டு, கரையின்மேல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில்  நடைமேடை அமைக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்க வேலி அமைக்கப்படும். பல இடங்களில் கலக்கும் கழிவுநீரை வாய்க்கால் அமைத்து ஒன்றிணைத்து வையாபரி  குளத்தின் மேற்கு மூலைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து, விவசாய  பயன்பாட்டிற்கு தகுந்தவாறு மாற்றி குளத்தில் கலக்கப்படும். இதுபோல் சிறுநாயக்கன் குளத்திலும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து, சுத்திகரிப்பு  நிலையம் ஏற்படுத்தப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும். விரைவில் இப்பணிகள் துவங்க உள்ளது. இதுபோல் ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் வரதமாநதி  அணையில் இருந்து மழை காலங்களில் பாசன குளங்களுக்கு போக சண்முகநதி ஆற்றில் வீணாக கலக்கும் வெள்ளநீரை தடுத்து, பாப்பன்குளத்தில்  இருந்து சத்திரப்பட்டி கருங்குளம் வரை வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் இவ்வாய்க்கால் வரும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடை  மற்றும் இதர தடுப்பணைகளுக்கும் நீர் சேமிக்க வழிவகை ஏற்படும். பாசன குளங்களுக்கு போக எஞ்சிய உபரிநீர் என்பதால் பாசன விவசாயிகளுக்கும்  பாதிப்பு இருக்காது’ என்றனர்.

Related Stories: