கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல் : நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு தடை

டெல்லி :கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடாளுமன்றத்துக்கு பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தலைதூக்கி உள்ள கொரோனா வைரஸின் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் தலைதூக்கிய கொரோனா வைரஸ்

சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 70 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது. இது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை உலக முழுவதும் 95 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,200 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மத்திய அரசு சுற்றறிக்கை

இந்த நிலையில், இந்தியாவில் தலைதூக்கி உள்ள கொரோனா வைரஸின் பரவலை தடுக்க மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் கை மற்றும் சுவாச சுகாதாரத்தின் எளிய அனைவரும் நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற வளாகத்தினுள் கூட்டம் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரு அவைகளையும் சேர்ந்த எம்.பிகள் அவர்கள் உடன் பார்வையாளர்களை அழைத்துவரக் கூடாது. பிற பார்வையாளர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஹோலி விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை நாடாளுமன்றம் தொடங்கவுள்ளது. அப்போதிலிருந்து இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

Related Stories: