முசிறி அருகேயுள்ள கோயிலின் சிவ பூஜைக்கு வரும் மயில்

முசிறி,: முசிறி அருகே குருவம்பட்டியில் உள்ள சிவன் கோயிலில் தினசரி மாலை நேரத்தில் பூஜைக்கு வரும் மயில் அப்பகுதி பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முசிறி அருகில் அமைந்துள்ளது குருவம்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மண்ணில் புதையுண்டு கிடந்த சிவலிங்கத்தின் பிரம்ம பாகத்தை அப்பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் எதேச்சையாக கண்டுள்ளார். சிவபக்தர் என்பதால் நண்பர்கள் சிலரின் உதவியுடன் சிவலிங்கத்தின் பிரம்ம பீடத்திற்கு ஆவணம் தயார் செய்து அப்பகுதியில் ஒரு மேடை அமைத்து சிறிய தகர கொட்டகை மூலம் கோயில் ஒன்று கட்டியுள்ளார்.

இங்கு அமைந்துள்ள ஈஸ்வரனை நீலமேகேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கின்றனர். பக்தர் ராஜரத்தினம் தினசரி கோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, அலங்கரித்து, பொங்கல் வைத்து படைத்து வருகிறார். இக்கோயிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில் இவ்வாலயத்திற்கு தினசரி காட்டுப் பகுதியில் சுற்றித் திரியும் ஆண் மயில் ஒன்று மாலை நேரத்தில் வருகிறது. அந்த மயிலுக்கு கைகளில் எடுத்துச் சென்ற தானியங்களை ராஜரத்தினம் பரிவுடன் நீட்டுகிறார். அந்த மயிலும் எவ்வித அச்சமுமின்றி தானியங்களை கொத்தி திண்கிறது. பின்னர் ராஜரத்தினம் டம்ளரில் தண்ணீரை மயிலிடம் நீட்டுகிறார். தாகம் தணிக்கும் வகையில் தண்ணீரை குடித்துவிட்டு பூஜை முடியும் வரை மயில் கோயில் பகுதியையே சுற்றி வருகிறது. தினசரி இங்கு நடைபெறும் சிவ வழிபாட்டில் மயில் கலந்துகொள்வது அப்பகுதி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: