அனுமதியில்லாமல் எந்த இடத்திலும் போராட்டம் நடத்த உரிமை இல்லை: திருப்பூர் போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரை சேர்ந்த வக்கீல் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், திருப்பூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர்கள் மீது இதுவரை 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பிறகும், அங்கு தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்த அனுமதிக்கும் காவல்துறையின் செயல் ஏற்க கூடியதல்ல. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதன் நோக்கமே மீண்டும் அந்த இடத்தில் அனுமதியில்லாமல் எந்தவொரு போராட்டமும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.

போராட்டத்துக்கான உரிமை என்பதற்கும், பொது சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. விரும்பிய இடத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு போராட அனுமதித்தால் அது பேராபத்தை ஏற்படுத்திவிடும்.

இந்த போராட்டம் எந்த நோக்கத்துக்காக நடைபெறுகிறது என்பதைவிட போராட்டத்தால் ஏற்படும் விளைவுகள் தான் கவலை கொள்ளச் செய்கிறது. திருப்பூரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அனுமதியின்றி எந்தவொரு போராட்டமும் நடத்த போலீசார் அனுமதியளிக்கக்கூடாது. மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை நிறுத்திவைக்க கோரி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில்  வக்கீல்கள் நீதிபதிகளிடம் நேற்று மதியம் முறையிட்டனர். அதை கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் நாளை (இன்று) விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

Related Stories: