கும்பகோணம் கோயிலில் தங்க, வைர புதையலா?.. நவீன கருவிகளுடன் குழிதோண்டிய 2 பேர் கைது

சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளவர்களா?

உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை

கும்பகோணம்: தங்கம், வைரம் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருவிசநல்லூரில் உள்ள பழமையான கோயிலுக்குள் நவீன கருவிகள் உதவியுடன் பள்ளம் தோண்டிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவிசநல்லூரில் 1,000 ஆண்டுகள் பழமையான கற்கடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகிறது. நேற்று இரவு 7 மணியளவில் கோயிலுக்குள் 2 நபர்கள் புகுந்து மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கிராமத்தினர் நவீன கருவிகளுடன் கோயிலுக்குள் திருடர்கள் புகுந்துள்ளனர் என கருதி ஊர் மக்கள் திரண்டு அவர்களை பிடித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சோழபுரத்தை சேர்ந்த கும்பகோணத்தில் என்பதும் தெரியவந்தது. இவர்களில் ஜிப்ரு காலித் சமீபத்தில் தான் மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். அவர் மலேசியாவில் இருக்கும்போது யூ டியூப்பில் உள்ள ஒரு வீடியோவில் பழங்கால கோயில்களில் தங்கம், வைரங்கள் புதையல் இருக்கும் என்பதை பார்த்துள்ளார்.

தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஏராளமான கோயில்கள் உள்ளது என்பதை அறிந்த ஜிப்ரு, அந்த கோயில்களில்தோண்டினால் தங்கம், வைரம் புதையல் கிடைக்கும் என பீர் முகமதுவிடம் கூறி உள்ளார். இதையடுத்து கடந்த 10 நாட்களாக கோயில் உள்ள பகுதியை இருவரும் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் ஆந்திரா சென்று விரைவில் குழி தோண்டும் சிறிய கருவியை வாங்கி வந்து உள்ளனர். இந்த கோயில் வயல்களுக்கு மத்தியில் இருப்பதால் நேற்று இரவு 8 மணிக்கு மேல் அங்கு மக்கள் நடமாட்டம் இருக்காது. எனவே இவர்கள் எளிதாக கோயிலுக்குள் சென்று பள்ளம் தோண்டி உள்ளனர்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இரவு நேரத்தில் 2 பேர் கோயிலுக்குள் செல்வதை பார்த்து ஊருக்குள் வந்து தெரிவித்து உள்ளார். சிலை கொள்ளையர்களாக இருக்கலாம் என கருதி ஊர் மக்கள் கோயிலை சுற்றி வளைத்தனர். பின்னர் கோயிலுக்குள் சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இவர்கள் புதையல் எடுக்கத்தான் வந்தார்களா, அல்லது வேறு நோக்கம் உண்டா, இவர்களுக்கும் தீவிரவாத கும்பலுக்கோ, சிலை கடத்தல் கும்பலுக்கோ தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: