அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவையொட்டி அம்பையில் மாசி மகா ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

அம்பை: அய்யா வைகுண்டர் அவதார தின விழாவையொட்டி  35 சப்பரங்கள் அணிவகுக்க அம்பையில் நடந்த மாசி மகா  ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த வாகைக்குளம் வாகைபதி மன் நாராயணசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா, தைப் பெருந்திருவிழா மற்றும் அய்யா வைகுண்டர் அவதார தின விழாவையொட்டி மாசி மகா ஊர்வலம் விமர்சையாக நடப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்கான அய்யா வைகுண்டரின் 188வது அவதார தின விழாவையொட்டி மாசி மகா ஊர்வலம் நேற்று மாலை அம்பை கிருஷ்ணன் கோயில் திடலில் இருந்து துவங்கியது.

இதையொட்டி அய்யா வைகுண்டர் வாகைபதியில் இருந்து ஆஞ்சநேயர் வாகனத்தில் ஆதிநாராயணர் கோலத்தில் அம்பை கிருஷ்ணன் கோயில் திடலில் எழுந்தருளியதோடு மாசி மகா ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார். இதை முன்னிட்டு அம்பை வாகைபதி, பாபநாசம், கபாலிபாறை, வைராவிகுளம், தாட்டான்பட்டி, குமாரசாமியாபுரம், வேட்டைக்காரன்குளம், ஊர்க்காடு, பூவன்குறிச்சி, அடைச்சாணி, முக்கூடல், பள்ளக்கால் பொதுக்குடி, கல்சுண்டு காலனி, கழுநீர்குளம், பழையபேட்டை, மேல ஏமாள்புரம், முக்கூடல், பாப்பாக்குடி, ஆழ்வார்குறிச்சி, உள்ளிட்ட 35 பதிகளில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக அனுமான், காளை, கருடன்,

நாகம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா வைகுண்டரை எழுந்தருளச் செய்து காவிக்கொடி ஏந்தி அன்புக்கொடி மக்கள் அம்பை கிருஷ்ணன் கோவிலுக்கு தோளில் சுமந்து பவனியாக கொண்டு வந்தனர். இதையொட்டி வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், சர்பத் உள்ளிட்ட பானம் வழங்கப்பட்டது. அத்துடன் வாணவேடிக்கையுடன் செண்டை மேளம் முழங்க வாகனங்களின் முன் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், சிலம்பாட்டம் ஆடியபடி ஆர்ப்பரித்து வந்தனர். தொடர்ந்து வாகனங்களுக்கு பன்னீர் தெளித்து சிறப்பு வழிபாடு நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டுவந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அய்யா சிவ சிவ, சிவ சிவ அரஹர அரஹர என சரணகோஷமிட்டபடி தரிசித்தனர். இதனிடையே கிருஷ்ணன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் கழுநீர்குளம் அரசபதியில் இருந்து வந்த வாகனம் தண்ணீரில் இறங்கி வலம் வந்தது பரவசத்தில் ஆழ்த்தியது. வாகன பவனி மேற்கு நோக்கி அம்பை தென்காசி பிரதான சாலை வழியாக வாகைபதியை வந்தடைந்ததும் அய்யாஅன்புக்கொடி மக்களுக்கு திருவருள் செய்து அன்னதர்மம் வழங்கப்பட்டது.

Related Stories: